bloggiri.com - Indian Blogs Aggregator

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

மகாநதி

முகநூலில் அபி அப்பா இடுகையை படித்தபோது மகாநதி பற்றிய இந்த விமர்சனம் மனதை சோகமாக்கியது.
அபி அப்பாவிற்கு உண்டான இதே மனநிலைதான் எனக்கும்.படம் பார்த்தப்பின்னர் கனத்த இதயம் அல்லது மனம்.சரியான ,இயல்பான நிலைக்கு வர உண்மையிலேயே சில நாட்களானது. அதுவும் சின்னவயது பெண் குழந்தைகள் உள்ளவர்கள் மனநிலை.....?
நாம் வாழும் உலகின் கொடூரமுகம் நமக்கு அறிமுகமாகியது.சோனாகாஞ்ச் இப்படி பட்ட  அபலைகளின் கூட்டம் என்பதை முகத்தில் அடித்து சொன்னது.
நாம் சுகம் தேடி போகும் இடத்தின் பதுமைகளுக்கு பின் இப்படி பட்ட பல கண்ணீர் கதைகள்தான் உள்ளன.
அதை நாம்  அனுப்பப் பூர்வமாக உணர கமல் உதவியுள்ளார்.
அபி அப்பா போன்றேதான் நானும்.எங்கள் உணர்வில்தான் பலரும் இருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.அது "இந்த கொடுமையை இனி பார்க்க கூடாது என்று எண்ணிக்கொண்டே முழுவதுமாக மீண்டும்,மீண்டும் மகாநதியை  பார்ப்பதுதான்."

சென்னை செண்ட்ரல் ஜெயில் உள்ளே செல்லில் அடைக்கப்பட்ட இரு கைதிகள்.... இரவு நேரம்... பூர்ணம் விஸ்வநாதனும், கமல் அவர்களும். 

அந்த சின்ன செல்லில் பூர்ணம் அவர்களுக்கு தானே சமைத்து சாப்பிட சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 

அதே சின்ன அறையில் ஒரு ஓரத்தில் “டாய்லெட்”, ஒரு பூஜை இடம்... அதில் சில கடவுள் படங்கள். அதை பூர்ணம் பூக்களால் பூஜித்த சுவடுகள்... இருவரும் பேசிக்கொள்கின்றனர்.....
பூர்ணம் விஸ்வநாதன் : நீ நாத்திகனா?

கமல்: உங்களுக்கு எது சௌகர்யப்படுமோ அப்படி வச்சுகுங்க.
பூக்கள் கொண்டு பூஜித்துக்கொண்டே பூர்ணம் : ஓ... ரெண்டுங்கட்டானா? ஸிரத்தையா ஸ்வாமிய பூஜிச்சி இருந்தா நீ இந்த இடத்துக்கு வந்திருக்கவே தேவையில்லை.
கமல்: ............... (மௌனம்... ஒரு தீர்க்கமான பார்வை)
பூர்ணம்: அப்ப நான்..ஙாங்..ங்...ஆங்... ஹும்... போடா... (முனுமுனுப்பாக) நாத்திகம் பேச வந்துட்டானுங்க...
வாவ்.... கே டி வியில் மகாநதி பிரவாகமாக ஓடிக்கொண்டுள்ளது. 
மகாநதி விஷயத்தில் நான் ஒரு மாஸோகிஸ்ட்... பார்க்கக்கூடாது... பார்க்கக்கூடாது என மனதில் கங்கனம் கட்டிக்கொண்டே பார்த்து தொலைவேன். 
இந்த படத்தை நான் தியேட்டரில் பார்த்த வருடம் 1993. “அபுதாபி சினிமா” என்னும் தியேட்டர் ஹம்தான் ஸ்ட்ரீட்ல் இருந்தது. (சிட்டி செண்டர் பில்டிங் எதிராக) பொதுவாக அதில் தமிழ் படங்கள் அதிகமாக வராது. அதிசயமாக வந்தது. அங்கே தான் பார்த்தேன். 
கமல் படம் என்னும் ஆசையில் பார்க்க சென்று விட்டு இரவு 8 மணிக்கு படம் முடிந்த பின்னர் நயா முஸாஃபா என்னும் என் இடத்துக்கு திரும்ப மனம் இல்லாமல் அங்கே எதிர்பக்கம் கோல்ட் ஸூக் அருகே அப்படியே அமர்ந்து இருந்தேன்.
 சுமார் மூன்று மணி நேரம் மனம் ஒரு தியான நிலையில் ஸ்தம்பித்து விட்டது. என்னை யார் கடந்து போகின்றார்கள் வருகின்றார்கள் என்கிற சொரனை ஏதுமின்றி அமர்ந்து இருந்தேன். பசி இல்லை, தாகம் இல்லை. இப்படியெல்லாம் படம் எடுக்க இயலுமா, இப்படியும் உலகத்தில் கேரக்டர்கள் இருப்பார்களா?
சோகப்படம் என்பது ஒரு ஊரில் ஒரு கதாநாயகன், அவனுக்கு 3 அக்கா, ஏழு தங்கச்சி, அதிலே நால்வர் நான்கு விதமான மாற்றுத்திறனாளிகள், சாப்பிட சோறு இல்லை, தினமும் தண்ணீர் குடித்து தான் வாழ்க்கை வாழ வேண்டும், ரொம்ப சோகமாக இருந்தால் ஒரு விதவை அம்மாவையும், ஏழு சகோதரிகளையும் மடியில் கிடத்தி சோகப்பாட்டு பாட வேண்டும். 
அந்த நேரம் மழை வேறு கொட்டும். அந்த ஓட்டை குடிசையில் அத்தனை மழையும் கதாநாயகன் தலையில் மட்டும் கொட்டும். மற்றவர்கள் மீது மழை விழாதபடி கதாநாயகன் தன் இரு உள்ளங்கைகளை வைத்து மழை நீரை ஏந்தி ஸ்ருதி பிசகாமல் ஒரு பேத்தாஸ் சாங் ஜேசுதாஸ் குரலில் இழைத்து இழைத்து, கண்ணதாசனை விட்டு வரிகளை தத்துவம், ஞானம் எல்லாம் போட்டு குழைத்து ஒரு பாடல்... பார்ப்பவர்கள் தேம்பி தேம்பி அழ வேண்டும்... இது தானே சோகப்படம் எனில் உலக நியதி?

ஆனால் மகாநதி இந்த நியதிகளை எல்லாம் உடைத்து எறிந்தது. 
கதாநாயகன் அன்பேவா எம் ஜி ஆர் மாதிரி பணக்காரனும் கிடையாது, துலாபாரம் ஏ வி எம் ராஜன் போல எழையும் கிடையாது. 

நடுத்தரமும் இல்லை... பின்ன என்ன தான் என கேட்டால்... “எனக்கு இது போதும். 
ரயில் தண்டவாளம் அருகே திருநாகேஸ்வரம் ஊரில் ஒரு அழகிய வீடு, சுற்றியும் பச்சை வயல், பாய்ந்து ஓடும் காவிரி, கொட்டைப்பாக்கு விவசாயம், அதில் சீவல் தயாரிப்பு தொழில், அழகாய் ஒரு மகள், அன்பாய் ஒரு மகன், மனைவி மரித்து போனாலும் கூட அந்த சுவடு தெரியாமல் குழந்தைகளை வளர்க்க தன் மாமியார். 
விளையாட காவிரி, கபடி, போய்வர பட்டீஸ்வரம் கோவில் இது போதும் என பொன் செய்யும் விருந்து படைப்பவன்...

காலச்சூழல் அவனை இதோ பூர்ணம் விஸ்வநாதனுக்கு ரூம்மெட் ஆக செண்ட்ரல் வரை கொண்டு வந்து விட்டது.... அங்கே தான் மேற்படி வசனங்கள்.
இந்த காட்சியில் பூர்ணம் விஸ்வநாதனுக்கு தான் அதிக வசனங்கள். கமல் அவர்களுக்கு வசனம் குறைவு. 
ஆனால் அதிகம்... என்ன குழப்பமாக இருக்கின்றதா? 
வசனம் என்பது ஒரு வசனகர்த்தா எழுதி அதை நடிகர் மனப்பாடம் செய்து... வாய் வழியே பேசுவது மட்டுமா??? 
இல்லை.... செல்வந்தர்கள் பணம் கொண்டு கடவுளுக்கு கோவில் கட்டுவார்கள். 
சித்தர்கள் மனம் கொண்டு கடவுளுக்கு கோவில் கட்டுவார்கள். அதாவது மனதிலேயே இடம் வாங்குவார்கள். மனதிலேயே அஸ்திவாரம், மனதிலேயே சுவர் எழுப்பி, மனதிலேயே விக்ரகம் செய்து.... இப்படி மனதாலேயே.... அத்தனை ஏன் சில சமயம் பணப்பற்றாக்குறையால் கோவில் கட்டுவது சில காலம் தடைபடுமே அது போல மனக்கோவிலும் தடைபடம்... பின்னர் எழும்பும்... பின்னர் குடமுழுக்கு.... அதற்கு கச்சேரிகள், சிவாச்சாரியார்கள், இன்ன பிற இன்ன பிற ... கடைசியில் கும்பத்தில் புனித நீர் ஊற்றும் வரை மனக்கோவில் கட்டி அதிலே தினம் பூஜை வேறு செய்வார்களாம். 
நிஜக்கோவிலை விட அந்த மனக்கோவிலுக்கு தான் கடவுள் அதிக பவர் கொடுப்பதாக எங்கோ ஒரு புத்தகத்தில் படித்திருக்கின்றேன்.
ஆக எங்கே விட்டேன் .... ஆங்... கமல் வசனம் பேச மாட்டார். ஆனால் அவர் கண்கள் பேசும். அந்த பார்வை பேசும் வசனங்களை தியேட்டரில் சாமானியன் புரிந்து கொண்டு பேசுவான்...

இதோ இப்படி
பூக்கள் கொண்டு பூஜித்துக்கொண்டே பூர்ணம்: ஓ... ரெண்டுங்கட்டானா? சிரத்தையா ஸ்வாமிய பூஜிச்சி இருந்தா நீ இந்த இடத்துக்கு வந்திருக்கவே தேவையில்லை.
கமல்: ............... (மௌனம்) தியேட்டரில் ரசிகன் : பின்ன என்ன மயிறுக்குடா நீ இங்க வந்த?
பூர்ணம்: அப்ப நான்..ஙாங்..ங்...ஆங்... ஹும்... போடா... (முனுமுனுப்பாக) நாத்திகம் பேச வந்துட்டானுங்க...
ஆக கமல் கண்கள் பேசுவதை சாமானிய ரசிகனை தன் வாயால் பேச வைக்கும் யுக்தி அழகோ அழகு... அது எப்போதும் கமலுக்கு கை வந்த கலை. 
அந்த படம் வந்து கால் நூற்றாண்டுகள் ஆகின்றன. இப்போது கமல் போத்தீஸ் விளம்பரம் ஒன்றில் நடிக்கின்றார். 
அவர் பேசும் போது “ஆடி என்றாலே....” என சொல்லிவிட்டு வாயை குவிக்கும் போது வீட்டில் இருக்கும் நண்டு சுண்டுகள் “போத்தீஸ்” என சொல்கின்றன. 
இது தான் கமல்... ஒரு முட்டாள் விளம்பர டைரக்டராகவோ அல்லது போத்தீஸ் ஓனர் முட்டாளாகவோ இருந்தால் என்ன ஆகியிருக்கும். “கமல் சார்... உங்க வாயால போத்தீஸ் போத்தீஸ்ன்னு சகஸ்ரநாம அர்ச்சனை மாதிரி சொல்லுங்க சார்.
 உங்க வாயாலே சொன்னா தான் மக்கள் மனசுல பதியும் சார்” என சொதப்பி இருப்பார்கள். 
ஆனால் நல்ல வேளை அப்படி எந்த விபரீதமும் நடக்கவில்லை அந்த விளம்பரப்படத்தில்...
எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன்.... இது மகாநதி பட விமர்சனம் இல்லை... போத்தீஸ் விளம்பரமும் இல்லை... 
சும்மா மனம் போன போக்கில் அந்த படத்தை தொடர்ந்து பார்க்க வேண்டாமே என நினைத்து எழுத ஆரம்பித்த பதிவு இதுன்னு வச்சுகுங்க.
பூர்ணம் விஸ்வநாதன், கள்ளபார்ட் நடராஜன், எஸ்.வி ரங்காராவ், காக்கா ராதாகிருஷ்ணன்...அத்தனை ஏன்... இதோ இப்போது இறந்து போனாரே சண்முகசுந்தரம் எல்லோருமே மிகப்பிரமாதமான நடிகர்கள் தான்... 
ஆனாலும் கமல் அவர்களை உலகநாயகன் என ஏன் சொல்கின்றோம் என நினைத்துப்பார்த்தால் .... நான் என்ன சொல்வது நீங்களே நினைத்துப்பாருங்கள்...
                                                                           

முகநூலில் அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நாட்டின் குடிநீர் தேவை ஆண்டுதோறும் அதிகரித்துவரும் நிலையில் குழாய் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் குறித்து பேராசிரியர் சீனி...