திங்கள், 21 ஆகஸ்ட், 2017

மார்க்ஸ் எனும் அரக்கன்

பி.பி.சி. ‘ரேடியோ 4′ அலைவரிசை நடத்திய கருத்துக்கணிப்பில் அதன் நேயர்கள் தங்கள் அபிமான சிந்தனையாளராக கார்ல் மார்க்ஸைத் தெரிவு செய்தனர்.
பி.பி.சி. ‘ரேடியோ 4′ அலைவரிசை நடத்திய கருத்துக்கணிப்பில் அதன் நேயர்கள் தங்கள் அபிமான சிந்தனையாளராக கார்ல் மார்க்ஸைத் தெரிவு செய்தனர்.
கையில் நயாபைசா இல்லாமல் புலம் பெயர்ந்து வந்து இலண்டன் மாநகரில் தஞ்சம் புகுந்த ஒரு அகதியை வசைபாடுவதற்கும், அவர் மீது பழிதூற்றுவதற்கும் இரண்டு முழுப் பக்கங்களைச் செலவிட்டிருந்தது ஒரு பிரிட்டிஷ் வலதுசாரிப் பத்திரிகையின் சென்ற வார இதழ். ’அகதி’ என்ற சொல்லைக் கேட்டாலே வலதுசாரிகளுக்கு உடம்பெல்லாம் எரியும் என்பதால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லைதான். எனினும் தாக்குதலுக்கு ஆளான இந்த அகதி இருக்கிறாரே, அவர் தற்போது உயிருடன் இல்லாதவர். அதாவது, 1883-இலேயே இறந்து விட்டவர்.
ஆம்! ‘மார்க்ஸ் எனும் அரக்கன்’ என்பதே மேற்படி கட்டுரையின் தலைப்பு. பி.பி.சி. ‘ரேடியோ 4′ அலைவரிசை நடத்திய கருத்துக்கணிப்பில் அதன் நேயர்கள் தங்கள் அபிமான சிந்தனையாளராக கார்ல் மார்க்ஸைத் தெரிவு செய்ததுதான் இந்த வெறிகொண்ட எதிர்வினைக்குக் காரணம்.
“ஸ்டாலின், மாவோ, போல்பாட், முகாபே போன்ற கொலைகாரச் சீடர்களை உருவாக்கிய ஒரு மனிதனை உலகின் தலைசிறந்த தத்துவஞானியாக எப்படித் தேர்ந்தெடுக்க முடியும்?” இது அந்தப் பத்திரிகை எழுப்பியிருக்கும் கேள்வி.
இந்த அதிர்ச்சியும் ஆச்சரியமும் புரிந்து கொள்ளத் தக்கதே. 15 ஆண்டுகளுக்கு முன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசம் வீழ்ச்சியடைந்த பின், “மார்க்ஸின் கதை இதோடு முடிந்தது” என்றொரு கருத்து பொதுவாகப் பரவியிருந்தது. “அவர் செத்துவிட்டார், லண்டன் கல்லறையில் எஞ்சியிருக்கும் அவரது உடலின் எச்சங்கள் பெர்லின் சுவரின் இடிபாடுகளுக்குக் கீழ் நிரந்தரமாகப் புதைக்கப்பட்டு விட்டன. யாரும் அவரைப் பற்றிச் சிந்திக்கத் தேவையில்லை; அவரது சிந்தனைகளை இனி படிக்கவே தேவையில்லை” என்பதே அந்தப் பொதுக் கருத்து.
பனிப்போர் முடிவுக்கு வந்த அந்த காலகட்டத்தில் ஃபிரான்சிஸ் ஃபுகுயாமா கூறினார், “நாம் கடந்து சென்று கொண்டிருப்பது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கட்டமல்ல, நாம் காண்பது வரலாற்றின் முடிவு. மனித குலத்தின் சித்தாந்த வளர்ச்சிக்கே எல்லை இதுதான். இத்துடன் முடிந்தது” இது அவரது பிரகடனம்.
வரலாறோ திரும்பியது; ஒரு வன்மத்துடன் விரைவிலேயே திரும்பியது. 1998 ஆகஸ்டில் ரசியாவின் பொருளாதாரம் கற்பூரமாய்க் கரையத் தொடங்கியது. ஆசிய நாடுகளின் நாணய மதிப்புகள் தலைகுப்புறக் கவிழ்ந்தன. உலகச் சந்தை முழுதும் பீதி பரவத் தொடங்கியது.
“உலக முதலாளித்துவம் வெற்றிக் கொடி நாட்டி பத்தாண்டுகள் கூட ஆகவில்லையே! அதற்குள்ளாகவா நாம் நெருக்கடியில் சிக்கிவிட்டோம்?” என்று தனது அதிர்ச்சியை வெளியிட்டது லண்டனின் “ஃபைனான்சியல் டைம்ஸ்” பத்திரிகை. அந்தக் கட்டுரையின் தலைப்பென்ன தெரியுமா? “டாஸ் காபிடலை (மார்க்சின் “மூலதனம்” நூலை) இன்னொரு முறை புரட்டிப் பார்ப்போம்!”
முதலாளித்துவ அமைப்பினால் பெரிதும் ஆதாயம் அடைந்தவர்கள் கூட “நம்முடைய வண்டி தொடர்ந்து ஓடுமா?” என்ற கேள்வியை எழுப்பத் தொடங்கினார்கள்.
“தானும் தன்னையொத்த முதலாளிகளும் தங்களது மந்தை மனப்பான்மையை கட்டுப்படுத்திக் கொள்ளாவிட்டால், இந்த மந்தையின் காலடியில் எல்லோரும் மிதிபட்டுச் சாகவேண்டியதுதான்” என்று எச்சரிக்கை செய்கிறார், மிகப் பெரும் கோடீசுவரனும் ஊகச்சந்தை வணிகனுமான ஜார்ஜ் சோரோஸ்.
“முதலாளித்துவ அமைப்பைப் பற்றி நம்முடைய செவ்வியல் பொருளாதார வல்லுனர்கள் கூறும் சமநிலைக் கோட்பாட்டைக் காட்டிலும் சிறந்த முறையிலான ஆய்வை 150 ஆண்டுகளுக்கு முன்னரே மார்க்சும் எங்கெல்சும் வழங்கியுள்ளனர் என்று நிச்சயமாக என்னால் கூற முடியும்.”
“அச்சுறுத்தும் வகையில் கூர்மையான அவர்களது ஊகங்கள் உண்மையாகாமல் போனதற்குக் காரணம் இருக்கிறது. ஜனநாயக நாடுகளில் (கம்யூனிச அபாயத்தைத் தடுக்க) எதிர்நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலையீடுகள்தான் அதற்குக் காரணம். வரலாறு நமக்குப் பாடம் கற்பித்திருக்கிறது. அந்தப் பாடங்களிலிருந்து கூடத் தவறான முடிவுகளுக்கு மட்டுமே நாம் வருகிறோம். இன்னொரு முறை இதே தவறை நாம் செய்யும் அபாயம் இருக்கிறது. இந்த முறை அபாயம் கம்யூனிசத்திடமிருந்து வரவில்லை சந்தை கடுங்கோட்பாட்டுவாதம்தான் இன்று நமக்கெதிரான அபாயமாகும்.”
இவையெல்லாம் உலகின் மிகப் பெரும் ஊகச்சந்தை வணிகனான ஜார்ஜ் சோரோஸ் வெளியிட்டுள்ள கருத்துக்கள்.
’நியூயார்க்கர்’ பத்திரிகையின் வணிகத்துறைச் செய்தியாளர் ஜான் காசிடி, ஒரு முதலீட்டு வங்கியின் முதலாளியுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அந்த உரையாடலைப் பற்றி அக்டோபர் 1997-இல் எழுதினார். “வால் தெருவில் (நியூயார்க்கின் பங்குச் சந்தைத் தெரு) நான் எந்த அளவிற்கு நேரத்தைச் செலவிடுகிறேனோ, அந்த அளவிற்கு மார்க்ஸ் கூறியது சரிதான் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். முதலாளித்துவத்தை ஆய்வு செய்வதற்கு மார்க்ஸ் மேற்கொண்ட முறைதான் சரியானது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை” என்று சொன்னாராம் அந்த வங்கி முதலாளி.
பிரிட்டீஷ் பத்திரிகையாளர் – எழுத்தாளர் ஃபிரான்சிஸ் வீன்
பிரிட்டீஷ் பத்திரிகையாளர் – எழுத்தாளர் ஃபிரான்சிஸ் வீன்
மார்க்சின் நூல்களை இதுவரை படித்திராத செய்தியாளர் காசிடி, ஆவலை அடக்கமாட்டாமல் முதன்முறையாக மார்க்சைப் படித்தாராம். “உலகமயமாக்கம், ஏற்றத்தாழ்வுகள், அரசியல் ஊழல், ஏகபோகமயமாதல், தொழில்நுட்ப வளர்ச்சி, உயர் கலாச்சாரத்தின் வீழ்ச்சி, தொடர்ந்து உயிர்த்துடிப்பை இழந்து வரும் நவீன வாழ்க்கையின் தன்மை இவை பற்றியெல்லாம் ஆணி அடித்தாற்போலப் பேசும் மார்க்சின் எழுத்துக்களைக் கண்டேன். இதே விசயங்களைத்தான் இன்றைய பொருளாதார வல்லுனர்கள் ஏதோ புதிய பிரச்சினைகளாகக் கருதி எதிர்கொண்டு வருகிறார்கள். சில நேரங்களில், மார்க்சின் கால்தடம் பதிந்த பாதையில்தான் செல்கிறோம் என்பதை அறியாமலேயே அந்தப் பாதையிலும் நடக்கிறார்கள்” – இவை மார்க்சைப் படித்தபின் நியூயார்க்கர் இதழில் காசிடி எழுதிய கருத்துக்கள்.
முதலாளி வர்க்கம் இன்னும் சாகவில்லை. மார்க்சும்தான் சாகவில்லை. முதலாளித்துவத்தைப் பற்றிய அவரது கணிப்புகளில் சில நிறைவேறாமல் போயிருக்கலாம்; அவர் தவறிழைத்திருக்கலாம். ஆனால், முதலாளித்துவம் என்ற மிருகத்தின் இயல்பை வெளிக் கொணர்ந்து காட்டிய அவரது ஆய்வின் கூர்மை இருக்கிறதே அந்த ஊடுருவிச் செல்லும் கூர்மை – அது அவரது கணிப்பில் நேர்ந்த சில பிழைகளையெல்லாம் புறந்தள்ளிக் கடந்து சென்றுவிட்டது.
கம்யூனிஸ்டு அறிக்கையில் அவர் எழுதினார்: “ஓயாது ஒழியாது உற்பத்தியில் ஏற்படும் புரட்சிகர மாற்றங்களும், சமூக உறவுகள் யாவும் இடையறாது அமைதி குலைதலும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்பும் முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய எலலா சகாப்தங்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றது.”
சமீப காலம் வரையிலும் இங்கிலாந்தில் பலர் தம் வாழ்நாள் முழுவதும் ஒரே வேலையில் தொடர்ந்தார்கள்; அல்லது ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றினார்கள். ஆனால் இன்று? அப்படி யாரையாவது நாம் காட்ட முடியுமா? மார்க்ஸ் கூறியதைப் போல, “திடப்பொருட்கள் எல்லாம் காற்றில் கரைகின்றன” அல்லவா?
உண்மையில் மனிதனுக்கு மட்டுமே உரியவையாக இருக்கும் அனைத்தும் சரக்காக, உயிரற்ற சடப்பொருளாக உறைந்து போவதையும், அந்தச் சரக்கானது, பேராற்றலையும் உயிர்த்துடிப்பையும் பெற்று, தன்னை உற்பத்தி செய்த மனிதர்களையே கொடுங்கோன்மைக்கு ஆளாக்குவதையும் தனது தலைசிறந்த படைப்பான மூலதனத்தில் மார்க்ஸ் நிரூபித்துக் காட்டுகிறார்.
நம்முடைய வாழ்க்கையை ஆளும் சக்திகளைப் பற்றியும், அவை நம் வாழ்வில் தோற்றுவிக்கும் நிச்சயமின்மை, அந்நியமாதல், சுரண்டல் போன்றவை பற்றியும் மார்க்ஸ் வழங்கியுள்ள சித்தரிப்பு இன்னும் எதிரொலித்த வண்ணம்தான் இருக்கிறது; அது உலகின் கவனத்தை மீண்டும் ஈர்த்தே தீரும். பி.பி.சி. வானொலியின் கருத்துக் கணிப்பு காட்டும் உண்மை இதுதான்.
பெர்லின் சுவரின் இடிபாடுகளுக்கு அடியில் மார்க்ஸ் புதைக்கப்பட்டு விட்டதாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இல்லை. இப்பொழுதுதான் தனக்குரிய உண்மையான முக்கியத்துவத்துடன் அவர் எழுந்துவரப் போகிறார். இதனைப் புரிந்து கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ முடியாமல் வலதுசாரிப் பத்திரிகைகள் என்னதான் ஊளையிட்டாலும், 21-ஆம் நூற்றாண்டின் செல்வாக்குமிக்க சிந்தனையாளராக உருவெடுக்கப் போகிறார் கார்ல் மார்க்ஸ்.
                                                                                                                       – ஃபிரான்சிஸ் வீன்
(’கார்ல் மார்க்ஸ்’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலின் ஆசிரியர்.)
இலண்டனிலிருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகையில் Why Marx is man of the moment வெளியான கட்டுரை.
’இந்து’ நாளேட்டிலிருந்து (22.7.05) தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
– புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2005.
நன்றி : வினவு

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

ஊழல் புரியவே இல்லையா?

பொருளாதார வீழ்ச்சி, வேலையிழப்புகள், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகாத நிலை, பண மதிப்பழிப்பு நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்புகள், ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை உள்நாட்டு உற்பத்தித் தொழில்கள் மேல் தொடுத்திருக்கும் மரணத் தாக்குதல்கள், விவசாயத்தில் அழிவு, அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலைகள், அதிகரித்து வரும் பசு பயங்கரவாத தாக்குதல்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், சுகாதாரத்துறையின் சீர்கேடுகள், குழந்தைகள் மரணம், இந்தியாவின் கழுத்தின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் சீனக் கத்தி, எல்லையில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள், நட்பு நாடுகளாக இருந்த அண்டை நாடுகளின் விரோதம்..


கடந்த மூன்றாண்டுகளில் மோடி சந்தித்திருக்கும் தோல்விகளின் சிறிய பட்டியல் இவை. இன்னொருபுறம் தொடர்ந்து மாநிலத் தேர்தல்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று வருகின்றது. 
இந்த வெற்றிகளுக்கு குறிப்பிட்ட மாநிலங்களில் நிலவும் உள்ளூர் அரசியலின் நிலை, சாதி வாக்கு வங்கிகளின் பலாபலன்களைக் கேடாகப் பயன்படுத்திக் கொள்வது, மத ரீதியில் சமூகத்தைப் பிளந்து வைத்திருப்பது, வலுவான எதிர்கட்சிகள் இல்லாத நிலை என பல்வேறு காரணிகள் உள்ளன. எனினும், அவையனைத்தையும் கடந்து “மோடி கறைபடாத கரங்களுக்குச் சொந்தமானவர்” என்கிற ஒரு பிம்பம் இன்னமும் பராமரிக்கப்படுகிறது.

தமிழகத் தொலைக்காட்சி விவாதங்களில் கூட ஊழல் என்றாலே அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரசு ஆகிய கட்சிகளோடு தொடர்புடைய விசயம் போலவும், பாரதிய ஜனதா ஊழலின் கறைபடாத புனிதப் பிறவி போலவும் கட்டமைக்கப்பட்டிருக்கும் பொதுபுத்தியை அனைவரும் ஏற்றுக் கொண்டே விவாதிக்கின்றனர்.

ஆனால், இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? மோடி ஊழல் புரியவே இல்லையா?

இதோ மோடியே நேரடியாக பங்கேற்ற ஊழல்களின் ஒரு சிறிய தொகுப்பு:

2005 -ம் ஆண்டு தனது வழக்கமான பாணியில்; “கிருஷ்ணா கோதாவரி படுகையில் சுமார் 2.2 லட்சம் கோடி மதிப்பிலான எரிவாயு கண்டறியப்பட்டிருப்பதாக” அறிவித்தார் மோடி.

அதைத் துரப்பணம் செய்ய சுமார் 20,000 கோடி நிதியை ஒதுக்குகிறார். குஜராத் மாநில பெட்ரோலிய கார்ப்பரேஷன் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறைவடைந்தால், 2007 -ம் ஆண்டுக்குப் பின் இந்தியா பெட்ரோலை இறக்குமதி செய்யவே தேவையிருக்காது என்றெல்லாம் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டார்.

இறுதியில் மக்களின் வரிப்பணம் இருபதாயிரம் கோடியைக் கடலில் கொட்டிய பின்னும் எதிர்பார்த்த அளவில் எரிவாயு துரப்பணம் செய்யப்படவில்லை. கடைசியில் நட்டத்தில் மூழ்கிய குஜராத் மாநில பெட்ரோல் கார்ப்பரேஷன் நிறுவனத்தை ஓ.என்.ஜி.சி கையகப்படுத்த பிரதமரான பிறகு உத்தரவிடுகிறார் மோடி.

மோடி முதல்வராக இருந்த போது, சுமார் நானூறு கோடி மதிப்பிலான மீன் பிடி ஒப்பந்தம் முறையான டெண்டர் இல்லாமல் வேண்டியவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.


சுமார் 6,237.33 கோடி மதிப்பில் 2003 -ம் ஆண்டு குஜராத்தில் செயல்படுத்தப்பட்ட சுஜலாம் சுபலாம் யோஜனா என்கிற திட்டத்தில் சுமார் 500 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பதை குஜராத் சட்டமன்றப் பொதுக் குழுவே அம்பலப்படுத்தியது.

குஜராத் மாநில பெட்ரோல் கார்ப்பரேஷனுக்கு (GSPC) சொந்தமான பிபாவாவ் மின் உற்பத்தி நிலையத்தை ஸ்வான் எனர்ஜி நிறுவனத்திற்கு எந்த டெண்டரும் கோராமல் 381 கோடி ரூபாய் அடிமாட்டு விலைக்கு அள்ளிக் கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கணக்குத் தணிகை அதிகாரியின் அறிக்கைப்படி மோடி முதல்வராக இருந்த காலத்தில் போர்டு, எல்&டி, அதானி, எஸ்ஸார் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு 580 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடாக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆனந்தி பென் பட்டேலின் மகளுக்கு குஜராத் கிர் காடுகளுக்கு அருகில் உள்ள சுமார் 145 கோடி மதிப்பிலான 245 ஏக்கர் நிலம் வெறும் 1.5 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 16,000 ஏக்கர் நிலத்தை ஒரு சதுர மீட்டர் 32 ரூபாய் விலைக்கு அதானி நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு, ஒரு சதுர மீட்டருக்கு 6000 ரூபாய்!. இதனால் குஜராத் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 6,546 கோடி.

“ஒரே ஒரு எஸ்.எம்.எஸ்” மூலம் குஜராத்துக்கு அழைத்து வரப்பட்ட ரத்தன் டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு குஜராத் அரசு வழங்கிய மொத்த சலுகைகளின் மதிப்பு 33,000 கோடி. இதில் 1100 ஏக்கர் நிலம், சதுர மீட்டர் 900 ரூபாய் மதிப்புக்கு சல்லி விலைக்கு தூக்கிக் கொடுக்கப்பட்டது. 

மேலும் இண்டி கோல்ட் ரிபைனரிஸ் நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 40 கோடி இழப்பு.
இவ்வாறு சலுகைகள் வழங்குவதால் தொழில்கள் வளர்ந்து அதனால் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது முதலாளிய அறிஞர்களின் அருள்வாக்கு. 


ஆனால், குஜராத்தில் அவ்வாறு நிகழவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி வழங்கப்பட்ட சலுகைகளால் மக்களுக்கு ஒரு நன்மையும் ஏற்படவில்லை என்பது ஒருபுறம் இருக்க, அதானி என்கிற ஒரே ஒரு முதலாளியின் நிறுவனத்தின் வருமானம் 2002 -ம் ஆண்டு 3,741 கோடியாக இருந்து 2014 -ல் 75,659 கோடியாக உயர்ந்துள்ளது.

அதானியின் வளர்ச்சிக்காக வளைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் மீறப்பட்ட மரபுகளின் பட்டியல் மிக நீண்டது. நிலக்கரி இறக்குமதியில் அதானி குழுமம் குஜராத்திகளுக்கு பட்டை நாமம் போட்ட விவகாரத்தை மாத்திரம் வருவாய் புலணாய்வுத்துறை முறையாக விசாரித்தால் சுமார் 15,000 கோடி அளவுக்கு அபராதம் விதிக்க வேண்டியிருக்கும் என்கிறார் அத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.

இதோனேஷியாவில் உள்ள தனது நிலக்கரி நிறுவனத்திடமிருந்து 50 டாலர் மதிப்பு கொண்ட ஒரு டன் நிலக்கரியை 82 டாலருக்கு இறக்குமதி செய்துள்ளார். இவ்வாறு மிகை மதிப்பு கூட்டிய (Over invoiced) நிலக்கரியின் சுமையை மக்கள் சுமந்தனர் – ஒவ்வொரு யூனிட் மின்சாரத்துக்கும் 1.5 ரூபாய் அதிகம் கட்டினர். 

இறக்குமதி விதிகளை மீறி மிகை மதிப்புக்கான ஆவணங்களை உருவாக்கவும், அரசை ஏமாற்றவும் மொரீஷியஸ் மற்றும் துபாய் வழியில் கள்ளத்தனமான பணப்பரிவர்த்தனையில் (Money laundring) ஈடுபட்டிருந்தார் அதானி.

கௌதம் அதானி பிரதமர் மோடியின் உற்ற நண்பர் என்பதையும், தேர்தல் பிரச்சார காலத்தில் அவரது விமானத்தைத் தான் மோடி டாக்சியாக பயன்படுத்தினார் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.

ஊழல் மட்டுமா, ஹிண்டால்கோ நிலக்கரித் தொகுதி ஒதுக்கீட்டில் குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடிக்கு நேரடியாக சுமார் 40 கோடி ரூபாய் லஞ்சம் ரொக்கமாக வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தையும் சி.பி.ஐ கைப்பற்றியது. எனினும், அது தொடர்பான விசாரணை சூடுபிடிப்பதற்கு முன் பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து மோடி பிரதமராகி விட்டார். 

“சந்தர்ப்ப சாட்சியங்களின்’ அடிப்படையில் லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிமன்றம், கையும் களவுமாக பிடிபட்ட மோடியின் வழக்கை ஊத்தி மூடியது என்பதைத் தனியே சொல்லத் தேவையில்லை; என்றாலும் அப்படித்தான் நடந்தது.

அனைத்து முனைகளிலும் தோல்வியுற்று விட்ட மோடியை “யோக்கியன்” என்கிற அந்தக் கிழிந்த முகமூடி தான் பாதுகாத்து வருகின்றது. சமூக வலைத்தளங்களில் பாரதிய ஜனதா இறக்கி விட்டுள்ள கூலிப்படையினரும், ஊடகங்களுமாக சேர்ந்து மோடியின் முகமூடியையும் அவரது பிம்பத்தையும் காப்பாற்றி வருகின்றனர். 

மேலே பட்டியலிடப்பட்டுள்ளவைகள் அனைத்தும் பல்வேறு சந்தர்பங்களில் வெளியான தகவல்கள் தான் எனினும், தொடர்ந்து நினைவூட்டுவதும் மக்களின் நினைவுகளைத் தூண்டிக் கொண்டிருப்பதும் அவசியமாகிறது.

செய்தி ஆதாரம் :

THE MYTH OF AN INCORRUPTIBLE MR MODI                                                                                                      நன்றி:வினவு.


நடுநிலைக்கு இவர்களே  இலக்கணம்.
வியாழன், 17 ஆகஸ்ட், 2017

மகாநதி

முகநூலில் அபி அப்பா இடுகையை படித்தபோது மகாநதி பற்றிய இந்த விமர்சனம் மனதை சோகமாக்கியது.
அபி அப்பாவிற்கு உண்டான இதே மனநிலைதான் எனக்கும்.படம் பார்த்தப்பின்னர் கனத்த இதயம் அல்லது மனம்.சரியான ,இயல்பான நிலைக்கு வர உண்மையிலேயே சில நாட்களானது. அதுவும் சின்னவயது பெண் குழந்தைகள் உள்ளவர்கள் மனநிலை.....?
நாம் வாழும் உலகின் கொடூரமுகம் நமக்கு அறிமுகமாகியது.சோனாகாஞ்ச் இப்படி பட்ட  அபலைகளின் கூட்டம் என்பதை முகத்தில் அடித்து சொன்னது.
நாம் சுகம் தேடி போகும் இடத்தின் பதுமைகளுக்கு பின் இப்படி பட்ட பல கண்ணீர் கதைகள்தான் உள்ளன.
அதை நாம்  அனுப்பப் பூர்வமாக உணர கமல் உதவியுள்ளார்.
அபி அப்பா போன்றேதான் நானும்.எங்கள் உணர்வில்தான் பலரும் இருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.அது "இந்த கொடுமையை இனி பார்க்க கூடாது என்று எண்ணிக்கொண்டே முழுவதுமாக மீண்டும்,மீண்டும் மகாநதியை  பார்ப்பதுதான்."

சென்னை செண்ட்ரல் ஜெயில் உள்ளே செல்லில் அடைக்கப்பட்ட இரு கைதிகள்.... இரவு நேரம்... பூர்ணம் விஸ்வநாதனும், கமல் அவர்களும். 

அந்த சின்ன செல்லில் பூர்ணம் அவர்களுக்கு தானே சமைத்து சாப்பிட சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 

அதே சின்ன அறையில் ஒரு ஓரத்தில் “டாய்லெட்”, ஒரு பூஜை இடம்... அதில் சில கடவுள் படங்கள். அதை பூர்ணம் பூக்களால் பூஜித்த சுவடுகள்... இருவரும் பேசிக்கொள்கின்றனர்.....
பூர்ணம் விஸ்வநாதன் : நீ நாத்திகனா?

கமல்: உங்களுக்கு எது சௌகர்யப்படுமோ அப்படி வச்சுகுங்க.
பூக்கள் கொண்டு பூஜித்துக்கொண்டே பூர்ணம் : ஓ... ரெண்டுங்கட்டானா? ஸிரத்தையா ஸ்வாமிய பூஜிச்சி இருந்தா நீ இந்த இடத்துக்கு வந்திருக்கவே தேவையில்லை.
கமல்: ............... (மௌனம்... ஒரு தீர்க்கமான பார்வை)
பூர்ணம்: அப்ப நான்..ஙாங்..ங்...ஆங்... ஹும்... போடா... (முனுமுனுப்பாக) நாத்திகம் பேச வந்துட்டானுங்க...
வாவ்.... கே டி வியில் மகாநதி பிரவாகமாக ஓடிக்கொண்டுள்ளது. 
மகாநதி விஷயத்தில் நான் ஒரு மாஸோகிஸ்ட்... பார்க்கக்கூடாது... பார்க்கக்கூடாது என மனதில் கங்கனம் கட்டிக்கொண்டே பார்த்து தொலைவேன். 
இந்த படத்தை நான் தியேட்டரில் பார்த்த வருடம் 1993. “அபுதாபி சினிமா” என்னும் தியேட்டர் ஹம்தான் ஸ்ட்ரீட்ல் இருந்தது. (சிட்டி செண்டர் பில்டிங் எதிராக) பொதுவாக அதில் தமிழ் படங்கள் அதிகமாக வராது. அதிசயமாக வந்தது. அங்கே தான் பார்த்தேன். 
கமல் படம் என்னும் ஆசையில் பார்க்க சென்று விட்டு இரவு 8 மணிக்கு படம் முடிந்த பின்னர் நயா முஸாஃபா என்னும் என் இடத்துக்கு திரும்ப மனம் இல்லாமல் அங்கே எதிர்பக்கம் கோல்ட் ஸூக் அருகே அப்படியே அமர்ந்து இருந்தேன்.
 சுமார் மூன்று மணி நேரம் மனம் ஒரு தியான நிலையில் ஸ்தம்பித்து விட்டது. என்னை யார் கடந்து போகின்றார்கள் வருகின்றார்கள் என்கிற சொரனை ஏதுமின்றி அமர்ந்து இருந்தேன். பசி இல்லை, தாகம் இல்லை. இப்படியெல்லாம் படம் எடுக்க இயலுமா, இப்படியும் உலகத்தில் கேரக்டர்கள் இருப்பார்களா?
சோகப்படம் என்பது ஒரு ஊரில் ஒரு கதாநாயகன், அவனுக்கு 3 அக்கா, ஏழு தங்கச்சி, அதிலே நால்வர் நான்கு விதமான மாற்றுத்திறனாளிகள், சாப்பிட சோறு இல்லை, தினமும் தண்ணீர் குடித்து தான் வாழ்க்கை வாழ வேண்டும், ரொம்ப சோகமாக இருந்தால் ஒரு விதவை அம்மாவையும், ஏழு சகோதரிகளையும் மடியில் கிடத்தி சோகப்பாட்டு பாட வேண்டும். 
அந்த நேரம் மழை வேறு கொட்டும். அந்த ஓட்டை குடிசையில் அத்தனை மழையும் கதாநாயகன் தலையில் மட்டும் கொட்டும். மற்றவர்கள் மீது மழை விழாதபடி கதாநாயகன் தன் இரு உள்ளங்கைகளை வைத்து மழை நீரை ஏந்தி ஸ்ருதி பிசகாமல் ஒரு பேத்தாஸ் சாங் ஜேசுதாஸ் குரலில் இழைத்து இழைத்து, கண்ணதாசனை விட்டு வரிகளை தத்துவம், ஞானம் எல்லாம் போட்டு குழைத்து ஒரு பாடல்... பார்ப்பவர்கள் தேம்பி தேம்பி அழ வேண்டும்... இது தானே சோகப்படம் எனில் உலக நியதி?

ஆனால் மகாநதி இந்த நியதிகளை எல்லாம் உடைத்து எறிந்தது. 
கதாநாயகன் அன்பேவா எம் ஜி ஆர் மாதிரி பணக்காரனும் கிடையாது, துலாபாரம் ஏ வி எம் ராஜன் போல எழையும் கிடையாது. 

நடுத்தரமும் இல்லை... பின்ன என்ன தான் என கேட்டால்... “எனக்கு இது போதும். 
ரயில் தண்டவாளம் அருகே திருநாகேஸ்வரம் ஊரில் ஒரு அழகிய வீடு, சுற்றியும் பச்சை வயல், பாய்ந்து ஓடும் காவிரி, கொட்டைப்பாக்கு விவசாயம், அதில் சீவல் தயாரிப்பு தொழில், அழகாய் ஒரு மகள், அன்பாய் ஒரு மகன், மனைவி மரித்து போனாலும் கூட அந்த சுவடு தெரியாமல் குழந்தைகளை வளர்க்க தன் மாமியார். 
விளையாட காவிரி, கபடி, போய்வர பட்டீஸ்வரம் கோவில் இது போதும் என பொன் செய்யும் விருந்து படைப்பவன்...

காலச்சூழல் அவனை இதோ பூர்ணம் விஸ்வநாதனுக்கு ரூம்மெட் ஆக செண்ட்ரல் வரை கொண்டு வந்து விட்டது.... அங்கே தான் மேற்படி வசனங்கள்.
இந்த காட்சியில் பூர்ணம் விஸ்வநாதனுக்கு தான் அதிக வசனங்கள். கமல் அவர்களுக்கு வசனம் குறைவு. 
ஆனால் அதிகம்... என்ன குழப்பமாக இருக்கின்றதா? 
வசனம் என்பது ஒரு வசனகர்த்தா எழுதி அதை நடிகர் மனப்பாடம் செய்து... வாய் வழியே பேசுவது மட்டுமா??? 
இல்லை.... செல்வந்தர்கள் பணம் கொண்டு கடவுளுக்கு கோவில் கட்டுவார்கள். 
சித்தர்கள் மனம் கொண்டு கடவுளுக்கு கோவில் கட்டுவார்கள். அதாவது மனதிலேயே இடம் வாங்குவார்கள். மனதிலேயே அஸ்திவாரம், மனதிலேயே சுவர் எழுப்பி, மனதிலேயே விக்ரகம் செய்து.... இப்படி மனதாலேயே.... அத்தனை ஏன் சில சமயம் பணப்பற்றாக்குறையால் கோவில் கட்டுவது சில காலம் தடைபடுமே அது போல மனக்கோவிலும் தடைபடம்... பின்னர் எழும்பும்... பின்னர் குடமுழுக்கு.... அதற்கு கச்சேரிகள், சிவாச்சாரியார்கள், இன்ன பிற இன்ன பிற ... கடைசியில் கும்பத்தில் புனித நீர் ஊற்றும் வரை மனக்கோவில் கட்டி அதிலே தினம் பூஜை வேறு செய்வார்களாம். 
நிஜக்கோவிலை விட அந்த மனக்கோவிலுக்கு தான் கடவுள் அதிக பவர் கொடுப்பதாக எங்கோ ஒரு புத்தகத்தில் படித்திருக்கின்றேன்.
ஆக எங்கே விட்டேன் .... ஆங்... கமல் வசனம் பேச மாட்டார். ஆனால் அவர் கண்கள் பேசும். அந்த பார்வை பேசும் வசனங்களை தியேட்டரில் சாமானியன் புரிந்து கொண்டு பேசுவான்...

இதோ இப்படி
பூக்கள் கொண்டு பூஜித்துக்கொண்டே பூர்ணம்: ஓ... ரெண்டுங்கட்டானா? சிரத்தையா ஸ்வாமிய பூஜிச்சி இருந்தா நீ இந்த இடத்துக்கு வந்திருக்கவே தேவையில்லை.
கமல்: ............... (மௌனம்) தியேட்டரில் ரசிகன் : பின்ன என்ன மயிறுக்குடா நீ இங்க வந்த?
பூர்ணம்: அப்ப நான்..ஙாங்..ங்...ஆங்... ஹும்... போடா... (முனுமுனுப்பாக) நாத்திகம் பேச வந்துட்டானுங்க...
ஆக கமல் கண்கள் பேசுவதை சாமானிய ரசிகனை தன் வாயால் பேச வைக்கும் யுக்தி அழகோ அழகு... அது எப்போதும் கமலுக்கு கை வந்த கலை. 
அந்த படம் வந்து கால் நூற்றாண்டுகள் ஆகின்றன. இப்போது கமல் போத்தீஸ் விளம்பரம் ஒன்றில் நடிக்கின்றார். 
அவர் பேசும் போது “ஆடி என்றாலே....” என சொல்லிவிட்டு வாயை குவிக்கும் போது வீட்டில் இருக்கும் நண்டு சுண்டுகள் “போத்தீஸ்” என சொல்கின்றன. 
இது தான் கமல்... ஒரு முட்டாள் விளம்பர டைரக்டராகவோ அல்லது போத்தீஸ் ஓனர் முட்டாளாகவோ இருந்தால் என்ன ஆகியிருக்கும். “கமல் சார்... உங்க வாயால போத்தீஸ் போத்தீஸ்ன்னு சகஸ்ரநாம அர்ச்சனை மாதிரி சொல்லுங்க சார்.
 உங்க வாயாலே சொன்னா தான் மக்கள் மனசுல பதியும் சார்” என சொதப்பி இருப்பார்கள். 
ஆனால் நல்ல வேளை அப்படி எந்த விபரீதமும் நடக்கவில்லை அந்த விளம்பரப்படத்தில்...
எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன்.... இது மகாநதி பட விமர்சனம் இல்லை... போத்தீஸ் விளம்பரமும் இல்லை... 
சும்மா மனம் போன போக்கில் அந்த படத்தை தொடர்ந்து பார்க்க வேண்டாமே என நினைத்து எழுத ஆரம்பித்த பதிவு இதுன்னு வச்சுகுங்க.
பூர்ணம் விஸ்வநாதன், கள்ளபார்ட் நடராஜன், எஸ்.வி ரங்காராவ், காக்கா ராதாகிருஷ்ணன்...அத்தனை ஏன்... இதோ இப்போது இறந்து போனாரே சண்முகசுந்தரம் எல்லோருமே மிகப்பிரமாதமான நடிகர்கள் தான்... 
ஆனாலும் கமல் அவர்களை உலகநாயகன் என ஏன் சொல்கின்றோம் என நினைத்துப்பார்த்தால் .... நான் என்ன சொல்வது நீங்களே நினைத்துப்பாருங்கள்...
                                                                           

முகநூலில் அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்

புதன், 16 ஆகஸ்ட், 2017

கடவுள் இருந்தால் நல்லாயிருக்குமோ?

ஒரு முறை பெரியாரிடம், 

"நீங்கள் கடவுள் இல்லை என சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென உங்கள் முன் கடவுள் தோன்றி விட்டால் என்ன செய்வீர்கள்? "
                                                                                                                                -என்று கேட்டார்கள். 
சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னார் பெரியார், இருக்கிறார் என்று பிரசாரம் செய்து விட்டுப் போகிறேன். இது கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்கான பதில் இல்லை.

கடவுள் இல்லை என்பதில் பெரியாருக்கு இருந்த உறுதியை எடுத்துக் காட்டும் பதில். 
மட்டுமல்லாது, உண்மையை ஏற்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை, அது இதுவரை நான் பரப்புரை செய்து கொண்டிருப்பதற்கு எதிராக இருந்தாலும் கூட எனும் உறுதியையும் அந்த பதில் வெளிக் காட்டுகிறது. இந்த உறுதி கடவுளை நம்பிக் கொண்டிருக்கும் எவருக்கும் கைகூடாத ஒன்று. 
இந்த உறுதியைத் தான் மதம் குறித்து, கடவுள் குறித்து பேசுவோர் ஒவ்வொருவரிடமும் எதிர்பார்க்கிறோம். உங்களிடம் இருக்கும் எனும் அடிப்படையிலேயே தொடங்குகிறேன்.
உங்கள் கேள்வியை அப்படியே திருப்பிப் போட்டால்; நீங்கள் வாழ்நாள் முழுவதும் எதை நம்பிக் கொண்டிருந்தீர்களோ, எந்த நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டீர்களோ அந்த கடவுள் இல்லை என்றாகும் போது என்ன செய்வீர்கள்? 
இதற்கு நீங்கள் என்ன பதிலை சொல்வீர்களோ அந்த பதிலை நீங்கள் சரியாக உள்வாங்கிக் கொள்ல வேண்டும்.  
இதற்கு உங்களின் பதில் என்னவாக இருக்கும்? 
கடவுள் இல்லையென்றால் தான் இறந்த பிறகு எனக்கு வாழ்வு கிடையாதே. 
மரணத்துடன் முடிந்து விடும். என்பது தானே. 

அப்படியென்றால் இதை சரியாக உள்வாங்குதல் என்பது என்ன? 
இறந்த பிறகு ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பது பொது உண்மை அல்ல, அது யதார்த்தமும் அல்ல. கடவுள் இருக்கிறது என்று நம்புவோரின் ஒரு கிளை நம்பிக்கை அவ்வளவு தான். இதற்கு மேல் அதற்கு எந்த மதிப்பும் இல்லை. 
ஆக ஒருவரின் வெற்று நம்பிக்கையை அந்த நம்பிக்கையை ஏற்காத பிரிதொருவரிடம், அவரால் ஏற்கப்படாத நம்பிக்கையின் அடிப்படையில் கேள்வி எழுப்ப முடியுமா?
இதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்க்கலாம். நெருப்பு சுடும் என்பது பொது உண்மை. (மரணித்த பின் வாழ்வு இல்லை என்பதும் ஒரு பொது உண்மை) இல்லை, நெருப்பு குளிரும். 
எனவே விரலை வைத்துப் பாருங்கள் என்று சொன்னால் அதை ஏற்க முடியுமா? 
நெப்பில் விரலை வைத்து விட்டு எடுத்து விட முடியும், எனவே, யாரும் நெருப்பு குளிரும் என்று ஏமாற்ற முடியாது. மரணத்தின் பிறகு திரும்பி வர முடியாது என்பதால் அப்படி ஒன்று இருக்கிறது என ஏமாற்ற முடிகிறது.
இந்த இடத்தில் தான் ஒரு குழப்பம் வருகிறது. மரணத்தின் பின் வாழ்வு இருக்கிறதா இல்லையா என்பதற்கு எந்த உறுதியான சான்றும் இல்லை எனும் போது இரண்டுக்கும் சம வாய்ப்பு இருக்கிறது தானே என்பது தான் அந்தக் குழப்பம். அதனால் தான் நீங்கள், “எல்லாவற்றுக்கும் ஆயத்தமாக இருக்க வேண்டும் தானே” என்று கேட்டிருக்கிறீர்கள். 
இந்தக் குழப்பம் மனித உடல் குறித்தும், கடவுள் குறித்தும் அறியாமையில் இருப்பதனால் மட்டுமே ஏற்படுகிறது. மனித உடல் குறித்தும் கடவுள் குறித்தும் தெளிவான அறிதல் இருந்தால் இந்தக் குழப்பம் ஏற்படாது. மாறாக, இது ஏமாற்று வேலை என புரிந்து போகும்.
மனிதன் என்பது என்ன? 

நான் எனும் சிந்தனையா? அல்லது உடலா? இரண்டும் இணைந்தது தான். உடல் இல்லை என்றால் சிந்தனையும் இருக்க முடியாது. மூளை என்ற பொருள் இல்லை என்றால் எது குறித்த சிந்தனையும் இருக்க முடியாது. 
இன்னும் தெளிவாகச் சொன்னால் சமூகம் இல்லாமல், இந்த உலகம் இல்லாமல் அறிவு, சிந்தனை என எதுவும் இருக்க முடியாது. மரணம் என்பது என்ன? 
உடல் மீள முடியாதபடி செயலிழந்து விட்டதால் அவனது மூளையில் பதியப்பட்டிருக்கும் தகவல்களும் அறிவும் அதனூடான சிந்தனையும் செயலற்று விட்டது என்பது தான். 
மீள முடியாத படி இயக்கமற்று விட்ட மனிதன், பின்னொரு காலத்தில் மீண்டெழுவான் என்பது கற்பனையாக மட்டுமே இருக்க முடியும்.
உலகில் பொருள் கருத்து என்று இரண்டு உண்டு. மனிதனும் ஒரு பொருள் தான். பொருள் கருத்து இரண்டுக்கும் இலக்கணங்கள் உண்டு. பொருள் என்றால் நான்கு பரிமாணம் இருக்க வேண்டும். நீளம், அகலம், உயரம், காலம் எனும் நான்கு பரிமாணங்கள் எல்லாப் பொருளுக்கும் உண்டு. இந்த நான்கு பரிமாணங்கள் இல்லாமல் எந்தப் பொருளும் இருக்க முடியாது. 
அதேபோல் கருத்து என்றால் அது பொருளைச் சார்ந்து தான் இருக்க முடியுமே அன்றி பொருள் இல்லாத தனித்த கருத்து என்று எதுவுமே இருக்க முடியாது. பிற கருத்துகளின் அடிப்படையில் உருவாக்கப்படும் பொருள் இல்லாத கருத்து கற்பனை அல்லது சிந்தனை எனப்படும். 
ஒரு மனிதன் மரணிக்கிறான் என்றால், மனிதன் எனும் அந்தப் பொருளின் நான்கு பரிமாணங்களும் முடிவுக்கு வந்து விட்டன என பொருள்படும். பொருள் முடிந்து விட்டது என்பதால் அந்தப் பொருளைச் சார்ந்து உருவான கருத்தும் அழிந்து விடுகிறது. அழிந்து விட்ட ஒரு பொருளும் அதனைச் சார்ந்த கருத்தும் மீண்டும் உருவாகும் என்பது கற்பனை தான். 
ஏனென்றால் நான்கு பரிமாணங்களும் அழிந்து விட்ட பொருள் மீண்டும் அதே பரிமாணங்களை பெற முடியாது. அதேபோல் இருக்கலாமே தவிர அதுவாக இருக்காது. எனவே, தனிப்பட்ட மனிதன் எனும் பொருள் அழிந்து விட்ட பிறகு மீண்டும் ஒருபோதும் அந்தப் பொருள் ஏற்படாது, அவ்வாறு ஏற்படும் என எண்ணுவது வெற்றுக் கற்பனை.
இந்த இடத்தில், மீண்டெழுதல் கற்பனை எனும் உண்மையை ஏற்க முடியாத மதவாதிகள், அதற்கு எதிராக எந்தவித சான்றையும் முன் வைக்க முடியாத மதவாதிகள், இந்த அறிவியலுக்கு பதிலாக அந்த இடத்தில் மீண்டும் ஒரு கற்பனையை முன் வைக்கிறார்கள். அது தான் கடவுள் எனும் கற்பனை. கடவுளால் எல்லாம் முடியும்.
கடவுளால் எதெல்லாம் முடியும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். 
கடவுள் என்பது என்ன? 
பொருளா? 
கருத்தா? 
கடவுள் வியாபாரிகள் கோடீஸ்வரர்கள்,கும்பிடுபவர்கள்?

அல்லது இந்த இரண்டும் அல்லாத வேறொன்றா? 
வேறொன்று என்றால் அது என்ன? 
கடவுளை நம்பும் எவராலும் இந்தக் கேள்விக்கு பதில் கூற முடியாது. கடவுள் குறித்து கூறப்படுவன எல்லாம் – அது எந்த மதக் கடவுளாக இருந்தாலும் – கடவுளின் தன்மைகள் தானே தவிர கடவுள் என்றால் என்ன என்பது அல்ல. 
ஆக உங்கள் கேள்வியை நெருக்கிப் பார்த்தால் அது கடவுள் என்றால் என்னவென்றே தெரியாமல் கடவுளால் இதெல்லாம் முடியும் என நம்பு என்பதாகத் தான் இருக்கிறது. அதாவது, கடவுளை எந்த அடிப்படையும் இல்லாமல் வெறுமனே நம்புகிறவர்கள், அறிவியல் ரீதியான, வரலாற்று ரீதியான, சமூக ரீதியான புரிதல்களோடு கடவுள் இல்லை என்பவர்களிடம்; மரணத்தின் பிறகு கடவுள் வந்து விட்டால் உன்னால் மீண்டும் வாழ முடியாது எனவே மரணத்துக்கு முன்பு கடவுளை நம்பு என்கிறார்கள். 
இந்த அபத்தம் புரிகிறதா உங்களுக்கு?

கடவுள் உண்டு என்பவர்கள், அதற்கு எந்தவித சான்றையும் காட்டியதில்லை, காட்டவும் முடியாது. 
ஆனால் கடவுள் இல்லை என்பவர்களோ அதற்கான சான்றுகளை தெளிவாகவே முன் வைக்கிறார்கள்.
அறிவியல் ரீதியான காரணங்கள்:
  1. எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.
  2. தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.
  3. எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.
வரலாற்று ரீதியான காரணங்கள்:
  1. ஆதி மனிதர்கள் வாழ்வில் கடவுள் எனும் நிலை இருந்ததற்கான எந்த சான்றும் கண்டறியப் படவில்லை.
  2. பூமியில் மனிதன் எனும் உயிரினம் தவிர ஏனைய உயிரினங்களுக்கு கடவுள் எனும் உணர்வு இல்லை.
சமூக ரீதியான காரணங்கள்:
  1. கடவுளின் தகுதிகள் என கூறப்படுபவை உள்ளுக்குள் சுய முரண்பாடுகலோடு இருக்கின்றன. அதாவது, ஒரு தகுதி இன்னொரு தகுதிக்கு முரண்படுகிறது.
  2. கடவுளிடமிருந்து கிடைத்தது என்று சொல்லத்தக்க, சோதித்தறியத்தக்க எதுவுமே கண்டறியப்படவில்லை.
எனவே, கடவுள் இருக்க முடியுமா எனும் கேள்விக்கு இருக்க முடியாது என்பது ஆதாரபூர்வமான பதிலாக இருக்கிறது. மனிதன் மீண்டும் உயிர்த்தெழ முடியுமா எனும் கேள்விக்கு உயிர்த்தெழ முடியாது என்பது தெளிவான பதிலாக இருக்கிறது. 
ஆகவே, மரணத்துக்குப் பின் கடவுள் வந்து விட்டால் என்ன செய்வது எனும் கேள்வி மக்களை ஏமாற்றுவதற்காக முன் வைக்கப்படும் கேள்வி, மக்களை குழப்புவதற்காக முன் வைக்கப்படும் கேள்வி, மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி பயங்காட்டுவதற்காக  முன் வைக்கப்படும் கேள்வி.
அந்தக் கேள்வியை புறந்தள்ளி விட்டு இந்த உலகைப் பாருங்கள். சொர்க்கம் என்றால் அது இந்த உலகில் ஏகாதிபத்தியவாதிகள் வாழும் வாழ்வு. 
நரகம் என்றால் அது இந்த உலகில் உழைக்கும் மக்கள் வாழும் வாழ்வு என்பதாக புரிந்து கொள்ளுங்கள். அன்றிலிருந்து இன்றுவரை மக்கள் படும் வேதனைக்கும் துன்ப துயரங்களுக்கும், மக்களின் உழைப்பு சுரண்டப்படுவதற்கும் நேரடியான தொடர்பு இருக்கிறது. 
அந்த சுரண்டலை அகற்றுவதற்கு கரம் சேருங்கள். அது தான் இப்போதைய இன்றியமையாத தேவையாக இருக்கிறது.
மாறாக, மரணித்த பிறகு வாழும் வாழ்க்கை குறித்து யாராவது உங்களிடம் பேச வந்தால் கடவுள் என்றால் என்ன என்பதை நிரூபித்து விட்டு மேலே பேசுங்கள் என்று சவால் விட்டுச் சொல்லுங்கள்.
                                                                                                      -  செங்கொடி தளத்தில் இருந்து,நன்றியுடன் 
 

புதன், 9 ஆகஸ்ட், 2017

அறிவியலாளர் "புஷ்ப மித்ரா பர்கவா"

ந்தியாவின் புகழ்பெற்ற செல் மூலக்கூறு உயிரியல் (cellular molecular biology) விஞ்ஞானி புஷ்ப மித்ரா பர்கவா (Pushpa Mittra Bhargava) ஆகஸ்ட் 1, 2017 அன்று காலமானார்.
அறிவியல் மனப்பான்மையையும், மனித நேயத்தையும், ஆய்வுமுறை மற்றும் சீர்திருத்த சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்ளல் ஒவ்வொரு குடிமகனும் உள்ள அடிப்படைக் கடமையாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 51(அ) வரையறுத்துள்ளது. 
அரசியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் யதார்த்தத்தில் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கும் காலத்தில் இதை தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டு கடைசிவரை நேர்மையாகப் பின்பற்றியவர் பர்கவா.
1928-ம் ஆண்டு ராஜஸ்தான் அஜ்மீரில் பிறந்த பர்காவா, வாரணாசியில் உள்ள தியாசபிகல் கல்லூரியிலும், குயின்ஸ் கல்லூரியிலும் படித்தார். 
அங்கு 1944-ம் ஆண்டு இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் பி.எஸ்.சி. பட்டம் பெற்றார்.
1946-ம் ஆண்டில் கரிம வேதியியல் துறையில் தனது எம்.எஸ்.சி. பட்டத்தை பூர்த்தி செய்தார். தனது 21-ம் வயதில் லக்னோ பல்கலைக்கழகத்தில் செயற்கை கரிம வேதியியல் துறையில் ஆய்வுப்படிப்பை (PhD) முடித்தார்.
மைய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையத்தின் (CSIR) ஹைதராபாத்திலுள்ள செல்லுலார் மூலக்கூறு உயிரியல் ஆய்வுமையத்தின் (CCMB) நிறுவன இயக்குனராகவும் இருந்தார். இந்த ஆய்வுமையம் இந்திய அணுசக்தியின் தந்தை என்றழைக்கப்படும் ஹோமி பாபாவால் துவங்கப்பெற்ற டாடா அடிப்படை ஆய்வுகளுக்கான நிறுவனத்துடன் (TIFR) ஒப்பிடத்தக்கது. அதனால், பர்கவா இந்திய மூலக்கூறு உயிரியல் துறையின் தந்தை என அழைக்கப்படுகிறார். பிரதமரின் அறிவியல் ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளில் வகித்தவர் பர்கவா.
1946-களில் துவங்கப்பட்ட இந்திய அறிவியல் தொழிலாளர்கள் சங்கத்தின் (Association of Scientific Workers in india) நிறுவனர்களில் ஒருவர் பர்கவா. அறிவியலாளர்களும் கூட கூட்டு நலன்களைக் கொண்ட தொழிலாளர்களே; அவர்கள் பொது நலனுக்கான வேலைகளைத் தொடர்வதற்கு தங்களை ஒரு தொழிற்சங்கத்தில் அமைப்பாக்கிக் கொள்ளவேண்டும் என்றார் பர்கவா. மேலும், அப்போதைய பிரதமர் நேருவை தங்களது சங்கத்தின் தலைவராக இருக்க ஒப்புக் கொள்ளச் செய்தார்.
போபால் யூனியன் கார்பைடு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் உறுதியாக நின்றார் பர்கவா.
மற்ற முக்கிய அறிவியல் நிறுவனங்களும், விஞ்ஞானிகளும் போபால் யூனியன் கார்பைடு ஆலை விபத்தைப் பற்றி மவுனம் சாதித்தபோது பர்கவா விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் உறுதியாக நின்றார்.
1981-ம் ஆண்டு அறிவியல் மனப்பான்மையை பரப்புவதற்கான சங்கத்தை (Society for the Promotion of Scientific Temper) உருவாக்கிய விஞ்ஞானிகளில் பர்கவாவும் ஒருவர்.
1994-ம் ஆண்டு, அரசின் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சோதிடத்தை சேர்க்கும் முடிவை இந்திய அறிவியல் கழகங்களின் கூட்டிணைவு எதிர்க்காததால் அதன் உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் பர்கவா.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை இந்தியாவில் அனுமதித்ததை கடுமையாக எதிர்த்துவந்தார் பர்கவா.  மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அறிமுகம் செய்யப்படுவதை  குறைந்த பட்சம் 15 ஆண்டுகளுக்கு தள்ளிப்போட வேண்டும் என்று கூறிவந்தார்.
2015-ம் ஆண்டில் பகுத்தறிவாளார்கள் கல்புர்கி, பன்சாரே ஆகியோரது படுகொலைகள், மாட்டிறைச்சியின் பெயரால் தாத்ரி படுகொலை ஆகியவற்றைத் தொடர்ந்து மோடி அரசின் சகிப்பின்மைக்கு எதிராகவும், அறிவியல், பகுத்தறிவுக்கு எதிரான இந்துத்துவத்தின் தாக்குதலைக் கண்டித்தும் 1986-ல் தனக்கு வழங்கப்பட்டிருந்த பத்ம பூஷன் விருதை திருப்பிக் கொடுத்தார் பர்கவா.
உள்ளார்ந்த நம்பிக்கையினாலும் மூடநம்பிக்கையினாலும் பெறப்பட்டதும்…
மதம், பழக்கவழக்கம் மற்றும் பாரம்பரியதால் உந்தப்பெற்றதும்…
அறிவியல் அறிவு மற்றும் திறந்த மனப்பான்மையுடன் நேரடி முரண்பாடு உடையதுமான..
பழமைவாத, உணர்ச்சிவயப்பட்ட, பகுத்தறிவற்ற அணுகுமுறைகளுக்கு மாற்றாக அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் அதை நடைமுறை செயல்படுத்துவதும் இந்தியாவில் முன்னெப்போதையும் விட இன்றைய உடனடித் தேவையாகும்
”.
– அறிவியல் மனப்பான்மையை பரப்புவதற்கான சங்கத்தில் மக்கள் தங்களை இணைத்துக்கொள்ள அழைப்பு விடுத்து பர்கவா 1980-களில் வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி.
மக்களிடம் அறிவியல் மனப்பான்மையையும் பகுத்தறிவையும் வளர்ப்பதற்கு பன்முகத் தன்மையுடன் பணியாற்றிய பர்கவாவின் மரணம் இந்திய மக்களுக்கும், அறிவியல் துறைக்கும் மீப்பெரும் இழப்பாகும்.
 ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த குரு கோல்வால்கரை மங்கி ஆக்கிய பர்கவா :
பர்கவாவின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து இன்றைய காலப்பொருத்தம் கருதி ஆர்.எஸ்.எஸ்-சின் சித்தாந்த தலைவர் கோல்வால்கரை மூக்குடைத்த அவரது சந்திப்பு பற்றிய சிறுபகுதியை கீழே தருகிறோம்:
கோல்வால்கர்
1966-ம் ஆண்டு பசு வதையை தடை செய்யக்கோரி ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதும் பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. பூரி சங்கராச்சாரியார் பசு வதைக்கெதிராக உண்ணா விரதத்தை தொடங்கினார்.
அப்போது ஹைதரபாத் பிராந்திய ஆய்வுக் கூடத்தில் (Regional Research Laboratory) வேல இசெய்து வந்தார் பர்கவா. 1967-ம் ஆண்டு அறிவியல் மனப்பான்மையை பரப்புவதற்கான சங்கத்தின் சார்பில் பசுவதை தடை தொடர்பாக ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதற்கு தலைமை தாங்கினார் பர்கவா. இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரபல டாக்டர் பி.ராம்சந்தர், “நாம் பசுக்களை தின்னாவிட்டால், அவை நம்மை தின்றுவிடும்” என்று குறிப்பிட்டார். இது அன்றைய பத்திரிக்கைகளில் வெளியாகி அரசின் பிராந்திய ஆய்வுக் கூடத்தில் வேலை செய்து வந்த பர்கவாவுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தியது.
அரசு ஆய்வகத்தில் மேற்படி கலந்தாய்வுக் கூட்டத்தை எப்படி ஏற்பாடு செய்யலாம் என்று கேள்விகள் எழுப்பபட்டன. மத்திய அரசு, விசாரணைக்கு உத்தரவிட்டு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சர்க்கார் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. அக்குகுழுவில் பூரி சங்கராச்சாரியார், ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வல்கர், அமுல் புகழ் வர்கீஸ் குரியன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
கோல்வல்கர் பர்கவாவிடம் சரமாரியாக கேள்விகள் கேட்கத் தொடங்கினார். 
நீங்கள் பிராமணரா? 
இறைச்சி சாப்பிடுவீர்களா? 
பிராமணராக இருந்து எப்படி சாப்பிடுகிறீர்கள்? 
என்று நீண்டன கேள்விகள். 
அத்தனைக்கும் பொறுமையாக பதிலளித்தார் பர்கவா.
ஒரு உடல் எப்படி இறைச்சியை உருவாகுகிறது?
அடிப்படை உயிர்வேதியலைக் கொண்டு இறைச்சி உடலில் எப்படி உருவாகிறது என்று விளக்கினார். நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் புரதங்கள் இரைப்பை உள்ளிட்ட செரித்தல் உருப்புகளில் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகின்றன. அவை இரத்தத்தின் மூலம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு புரதமாக மறுகட்டமைக்கப்பட்டு திசுக்களாக மாறுகின்றன. இது தான் உடலில் இறைச்சி – திசுக்கள் உருவாகும் விதம்.
எனில் பால் எப்படி உருவாகிறது?
பாலும் இறைச்சியைப் போலவே அதே செயல் முறையில்தான் உருவாகிறது.
பாலும், இறைச்சியும் ஒரே மாதிரியாகத்தான் உருவாகின்றன என்றால் நீங்கள் ஏன் இறைச்சியை விட்டுவிட்டு பாலை உண்ணக்கூடாது – இது கோல்வால்கர்.
இதே தர்க்கத்தில் “பாலும், இறைச்சியும் ஒரே மாதிரியாகத்தான் உருவாகின்றன அப்படியிருக்க நீங்கள் ஏன் இறைச்சியை உண்ணக்கூடாது” – இது பர்கவா.
பர்கவாவின் எதிர்கேள்வி ஆர்.எஸ்.எஸ்-சின் கோல்வல்கரை மங்கியாக ஆட வைத்துவிட்டது. அவரை சமாதானப்படுத்த சங்கராச்சாரி பெருமுயற்சி எடுக்க வேண்டியிருந்தது. அன்றைய சித்தாந்தத் தலைவராக இருந்தாலும் சரி அவருடைய இன்றைய அடிபொடிகளாக இருந்தாலும் சரி லேசாக எதிர்கேள்வி கேட்டு மடக்கினாலே அவர்களுக்குள்ளிருக்கும் பாசிச மங்கியை வெளிக் கொணர்ந்துவிடலாம். பின்னர், தன்னை சந்தித்த பர்கவாவிடம் அருமையாக பதிலடி கொடுத்ததாக நீதிபதி சர்க்கார் பாராட்டியுள்ளார்.
பின் குறிப்பு: “அரசாங்கத்தை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குவதற்காகவும், இந்துக்களை பசு என்ற குறியீட்டைக் கொண்டு ஒன்று திரட்டவுமே பசுவதை தடை அரசியலைக் கையில் எடுத்தேன்” என்று பின்னர் வர்கீஸ் குரியனை சந்தித்த கோல்வல்கர் கூறியதாக குரியன் தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி:வினவு,                                                                                                                                      – நாசர்
கட்டுரையை எழுத உதவிய மூலங்கள்:

மார்க்ஸ் எனும் அரக்கன்

பி.பி.சி. ‘ரேடியோ 4′ அலைவரிசை நடத்திய கருத்துக்கணிப்பில் அதன் நேயர்கள் தங்கள் அபிமான சிந்தனையாளராக கார்ல் மார்க்ஸைத் தெரிவு செய்தனர். கைய...